• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Aug 7, 2022

நற்றிணைப் பாடல் 9:
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ
திணை பாலை
துறை: தலைவன் கூற்று

பொருள்:
காதலியை அவளது பெற்றோருக்குத் தெரியாமல் அழைத்துக்கொண்டு காதலன் தன் ஊருக்குச் செல்கிறான். வழியில் விருப்பம்போல் மகிழ்வுடன் செல்லலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அழைத்துச் செல்கிறான்.
ஒரு செயலைச் சோர்வின்றி முயன்று செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு அவர் வழிபடும் தெய்வம் அவருக்கு உதவுவதற்காக அவர் கண்முன் வந்து நிற்பது போல, என் மனக்கலக்கம் (அலமரல்) தீர உன் தோள்நலத்தைத் தழுவும் பேறு பெற்றிருக்கிறேன். (நீ என் தெய்வம்)
யாழ! புன்னகை பூக்கும் ‘வால்-எயிற்றோயே’
அரிசிப் பொரி போல் பூத்து உதிர்ந்து கிடக்கும் புண்கம் பூவையும், அதன் தளிர்களையும் உன் முலையில் அழகுற (அணங்கு கொள) அணிந்துகொள்க. நிழலைக் காணும் இடங்களிலெல்லாம் நீண்டநேரம் இளைப்பாறிக்கொள். மணலைக் காணுமிடங்களிலெல்லாம் வண்டல் விளையாடுவோம். வருந்தாது செல்க. காட்டுவழிதான் (கானம்). அங்கே மாம்பூக்களைக் கிண்டி உண்டு மகிழும் குயில்கள் பாடும் (ஆலும்) அதன் நறுமணம் வீசும் குளுமையான சோலை (பொழில்) அது நாம் செல்லும் வழியில் பற்பல சிற்றூர்களும் உண்டு மகிழ்வாகச் செல்லலாம் – என்கிறான் அவன்.