சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!
பாடியவர்: வெள்ளி வீதியார்
திணை: மருதம்
பொருள்:
குருகே! எம் ஊர்மக்கள் நீருண்ணும் துறைக்கு வந்து கெளிற்றுமீனை உண்டுவிட்டு அவர் ஊருக்குப் பறந்து செல்கிறாய். இங்கு நான் அவரை எண்ணி மெலிந்ததால் என் அணிகலன்கள் கழன்று விழுவதை அவருக்குச் சொல்லுவாயோ சொல்ல மறந்துவிடுவாயோ தெரியவில்லையே! இதுதான் அவளது பிதற்றல்.
ஆற்றுத்துறையில் தூய்மையாகத் துவைத்த பின்னர் மடித்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வெண்ணிறத் துணி போன்ற தூவி-மயிர் கொண்ட குருகு. அது சினையாக உள்ள களிற்று-மீனை வயிறார உண்டுவிட்டுச் செல்கிறதாம். (இது - தலைவி கருவுற்றிருக்கிறாள் என்பதனை விளக்கும் இறைச்சிப் பொருள்) அவன் ஊரில் பாயும் ஆற்றுநீர் இவள் ஊருக்கு வந்து பாய்கிறதாம்.