• Fri. Dec 13th, 2024

இலக்கியம்

Byவிஷா

Dec 7, 2022

நற்றிணைப் பாடல் 71:
மன்னாப் பொருட் பிணி முன்னி, ”இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து” எனப்
பல் மாண் இரத்திர் ஆயின், ”சென்ம்” என,
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,
பிரிதல் வல்லிரோ ஐய! செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?

பாடியவர்: வண்ணப்புறக் கந்தரத்தனார் பாடல்
திணை: பாலை

பொருள்:
பொருள் நிலை இல்லாதது. பொருள் என்னும் பிணி உன்னை வாட்டுகிறது. இந்தப் பிணியைப் பற்றி உன் தலைவியிடம் சொல் என்கிறாய். திரும்பத் திரும்பக் கெஞ்சிக் கேட்கிறாய். அவளிடம் சொன்னால் ‘செல்க’ என்று ஒப்புதல் தரவும் கூடும். அப்படி ஒப்புதல் தந்தால், அவளிடம் நேரில் சென்று, அவளது கண்ணையும், நெற்றியையும் நீவிக் கொடுத்துவிட்டு உன்னால் பிரிய முடியுமா? ஐய! செல்வர் இல்லம். இறைவான மாடத்தில் வண்ணப் புறா. அதன் செங்கால் சேவல். அது விரும்பும் பெண்புறா. ஆண்புறா பெண்புறாவை அழைக்கும் முரல்-குரல். இந்தக் குரலைக் கேட்டதும் அவள் உன்னை அணைக்கத் துடிப்பாளே! நீ என்ன செய்வாய்? பிரியமாட்டாய் என்பது பொருள்.