• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Oct 7, 2022

நற்றிணைப் பாடல் 58:
பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!

பாடியவர்: முதுகூற்றனார்
திணை: நெய்தல்

பொருள்:

தோழி தன் தலைவியின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்கிறாள். வழிவழியாகப் பெருஞ்செல்வராக விளங்குபவரின் சிறுவர்கள் முகப்பகுதியில் குருவிப்படம் எழுதிய சிறுபறையைத் தோளில் கோத்துக்கொண்டு, பொன்-காப்பு அணிந்திருக்கும் கையிலுள்ள கோலால் அடித்து முழக்குவர். தலைவன் தேரை இழுக்க நுகத்தில் பூட்டப்பட்டுள்ள குதிரையே, அந்தக் குருவிப்பறை வாங்கும் அடி போல நீ நன்றாக அடி வாங்குவாயாக. அவனைப் பிரித்து இழுத்துச் செல்கிறாயே, அதனால். வீரை நகரை ஆளும் வேளிர்குல அரசன் வெளியன் தித்தன், பகைமன்னர் முரசைக் கவர்ந்து கொண்டுவந்து அதில் நெய்யை ஊற்றி மாலையில் விளக்கேற்றுவான். சங்கு ஊதிக்கொண்டு விளக்கேற்றுவான். பகைவர்கள் அவலம் பட்ட நெஞ்சோடு திரும்புவார்கள். அதுபோல இவள் அவல நெஞ்சோடு திரும்புகிறாள்.