• Sat. Apr 27th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 6, 2022

நற்றிணைப் பாடல் 57:

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்
கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்
மாமலை நாட மருட்கை உடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலையெம்
மையீர் ஓதி மாண்நலம் தொலைவே.

பாடியவர் : பொதும்பில் கிழார்
திணை: குறிஞ்சி

பொருள்:
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் நிறைந்ததுள்ள ஒரு வேங்கை மரத்தடியில் தன் கன்றோடு தங்கி தூங்கிக் கொண்டிருந்தது.பஞ்சு போன்ற தலையை உடைய மந்தியானது கல்லென ஒலிக்கும் தன் தன் சுற்றத்தை ஒலிக்காதவாறு கையமர்த்தி விட்டு, அந்த பசுவினிடத்தை அடைந்து, பால் நிரம்பி பருத்திருந்த அப்பசுவினது மடியினை அழுந்தும்படி பற்றி இழுத்து இனிய பாலைக் கறந்து தன் தொழிலைக் கல்லாத குட்டியின் கை நிறைய பிழிந்து நிற்கும். இப்படிப்பட்ட பெரிய மலைகளை உடைய நாட்டிற்குத் தலைவனே! சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறிய திணைப் பயிரையும் உடைய அகன்ற புனமானது கதிர்களைக் கொய்யும் பருவத்தை நெருங்கும் காலத்து எம்முடைய (தலைவியின்)மாட்சிமைப்பட்ட நலனாது கெட்டழிவது உறுதி. ஏனெனில் தலைவி இல்லில் அடைக்கப்படுவாள். அவள் நலம் கெட்டுவிடும். அதனை நினைக்கும் போது என் நெஞ்சம் கலக்கம் உடையதாய் ஆகிறது. ஆகவே தலைவனே நீ விரைந்து வந்து மணந்து கொள்வாயாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *