• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Aug 15, 2022

நற்றிணைப் பாடல் 16:

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ் யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!

பாடியவர் சிறைக்குடி ஆந்தையார்
திணை பாலை

(பொருள் தேடத் தலைவியைப் பிரியவேண்டும் என்ற மனத்தை நோக்கித் தலைவன் பேசுகிறான்; கடைசியில் தலைவியைப் பிரிவதைத் தவிர்க்கிறான்)
“காதலியோடு இருந்தால் பொருள் தேடமுடியாது…
பொருள்:
பொருள் தேடப் பிரிந்தால் காதலின்பம் கிட்டாது… ஆயினும், பொருள் தேடச் செல்வது, செல்லாதிருப்பது – இரண்டில் நல்லதைத் தேர்ந்தெடுப்பது உன் உரிமை
என் நெஞ்சமே நீ வாழ்க.
வாடாத பூக்களுடைய பொய்கையின் நடுவில் ஓடும் மீன்களின் வழிகள் மறைந்து அழிவது மாதிரி, பொருள்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும். கடல் சூழ்ந்த பரந்த இந்த உலகத்தையே அளக்கும் கருவியாக்கி, ஏழுமுறை அளந்த அளவுக்குச் சமமான செல்வம் கிடைத்தாலும் விரும்பமாட்டேன். பெரிய தோடணிந்த என் காதலியின் செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்கள் பார்க்கும் இனிய பார்வையில்
என் ஆற்றல் இழந்தேன். எனவே செல்வமே! நீ எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி!
உன்னைப் போற்றுவாரிடம் நீ வாழ்க!”