எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). எல்ஐசி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் மிகவும் நம்பகமான காப்பீட்டு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமை கோரல் தீர்வு விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. எல்ஐசி நிறுவனம் தனது அலுவலகங்கள் இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட திங்கட்கிழமையும் தனது அலுவலகங்கள் திறந்திருக்கும் எல்ஐசி அறிவித்துள்ளது. புதிய நிதியாண்டு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் உள்ள எங்களது அலுவலகங்கள் மார்ச் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும். இந்த முடிவு சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதையும் பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்பபதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இன்று முதல் திங்கட்கிழமை வரையிலான 3 தினங்களும் எல்ஐசி அலுவலகங்கள் திறந்திருக்கும் என்பதால் எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். மேலும் புதிய காப்பீடு பாலிசி எடுக்க விரும்புபவர்களும் எடுக்கலாம்.
மார்ச் 12ம் தேதியன்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (இரிடா) வெளியிட்ட ஆலோசனையை தொடர்ந்து எல்ஐசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு காப்பீடு செய்யக்கூடிய தனிநபருக்கும் நிதி பாதுகாப்பை விரிவுப்படுத்துவதில் எல்ஐசி தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. எல்ஐசியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்த மொஹந்தி அண்மையில் பேட்டி ஒன்றில், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகத்தினருக்கு மலிவு விலையில் காப்பீட்டை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
எல்ஐசி தனது காப்பீட்டை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், எல்ஐசி நிறுவனம் குழு ஆண்டு புதுப்பிக்கத்தக்க பிரீமியங்களில் 28.29 சதவீத உயர்வையும், தனிநபர் பிரீமியங்களில 7.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மட்டும் மொத்தம் 12.04 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (2024 ஏப்ரல்-2025 பிப்ரவரி) தனிநபர் பிரீமியங்களாக ரூ52,328 கோடியை வசூல் செய்துள்ளது. தனிநபர் பிரிவு பாலிசிகளின் எண்ணிக்கை 1.46 கோடியை எட்டியது. எல்ஐசி நிறுவனம் காப்பீட்டு சேவை வணிகத்தில் மட்டுமல்ல பங்குச் சந்தை முதலீட்டாளராகவும் உள்ளது. பங்குகளில் மேற்கொள்ளும் முதலீட்டின் வாயிலாக கணிசமான வருவாயை எல்ஐசி ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சி அலுவலகங்கள் 3 நாட்கள் திறந்திருக்கும்
