முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, தமிழக அரசுடனான மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
உதகையில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர், நவீன காலத்தில் ஏற்ப கல்வி முறையில் மாற்றம் தேவை என தெரிவித்தார். தமிழகத்தில் இளைஞர்கள் பட்டப்படிப்புக்கேற்ப வேலை வாய்ப்பு இன்றி தவிப்பதாகவும், தேவைக்கேற்ப கல்வியை வழங்க முடியாத சூழல் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் நல்ல நிலையில் இருந்தாலும்…. தொடர் சரிவையும் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக முதலமைச்சர் அண்மையில் வெளிநாடு சென்று வந்ததாகவும் கூறினார்.
நாம் கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்குக்காண சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே அதற்கான சிறந்த வழி எனவும் ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டார்.