• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

ByKalamegam Viswanathan

Aug 29, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 55 பேர் பெண் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில், திருமங்கலம் நீதிமன்றங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், பேரையூர், வாடிப்பட்டி போன்ற இடங்களில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் ,திருமங்கலத்திற்கு இடவசதி இல்லை என கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும், குற்றம்சாட்டி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருமங்கலம் நீதிமன்றங்கள் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் உடனடியாக தலையிட்டு திருமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கை நிறைவேறும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு தொடரும் எனவும் அறிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், “திருமங்கலம் நீதிமன்றம் தமிழகத்திலேயே மிகவும் பழமையானதும், சிறப்பு வாய்ந்ததும் ஆகும். ஆனால் இங்கு வரும் பொதுமக்களுக்கும், பெண் வழக்கறிஞர்கள் உட்பட 250 வழக்கறிஞர்களுக்கும் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லை. உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து தர வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும்” என தெரிவித்தனர்.