உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்…
நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்கால கட்டிடத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இயங்கி வரும் நிலையில் உதகை பிங்கர் போஸ்ட் காக்கா தோப்பு பகுதியில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு நேற்று முதல் புதிய கட்டிடத்தில் நீதிமன்றம் செயல்பட துவங்கியுள்ளது.இந்நிலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்களுக்கு சங்க கட்டிடம் மற்றும் அறைகள் போதிய இடவசதி இல்லாததால் நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர்களை சந்தித்து தங்களது குறைகளை எடுத்துக் கூறியதாகவும், சாலை வசதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளதாக வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்தனர்.ஆனால் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் கட்டிடம் மற்றும் அறைகள் இட வசதி செய்து தரும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து தங்களது குறைகளை எடுத்துக் கூற உள்ளதாக வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் பழைய நீதிமன்ற வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)