
கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் கிராமங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் குடிநீர் எடுக்க சென்ற கூலி தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு. பேரூராட்சி அமைப்புகள் குடிநீர் வினியோகிக்க வனத்துறையினர் கடும் கட்டுபாடுகள் விதிப்பதாக மலைவாழ்மக்கள் குற்றசாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் பேரூராட்சிக்குட்பட்ட மலைவாழ்பகுதியான ஒருநூறான்வயல் மலைகிராமத்தில் கீழ்மலை குடியிருப்பு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்புகளில் குடிநீருக்காக அப்பகுதியை சேர்ந்த குஞ்சுராமன் காணி என்பவரின் மூத்த மகன் கூலி தொழிலாளியான மது (37) ஊற்றுகளிலிருந்து குடிநீரை எடுத்து செல்ல சிறு குழாய்களை சரி செய்ய கீழ்மலையிலிருந்து 2கிலோமீட்டர் காட்டுபகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மதுவை காட்டுயானைகள் கூட்டம் சூழ்ந்து திடீரென தாக்க துவங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மது உயிரிழந்தார். தொடர்ந்து மலைவாழ்மக்கள் வனத்துறையினருக்கு தகவலளித்ததை தொடர்ந்து சம்பவ இடதாநிற்கு வந்த களியல் வனத்துறையினர் மற்றும் எறுகாணி காவல்துறையினர் மதுவின் உடலை கைபற்றி ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், வனத்துறையினர் அடிப்படை வசதிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பதும் பேரூராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகம் செய்யவும், கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மலைவாழ் கிராம பழங்குடியினமக்களுக்கு குடிநீர் ,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளாவது செய்து கொடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

