• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் குண்டு வெடிக்க கேரள சிறையில் ஆலோசனை… பரபரப்பு வாக்குமூலம்.

ByA.Tamilselvan

Oct 29, 2022

கோவையில் குண்டுவெடிக்க கேரள சிறையில் ஆலோசனை நடைபெற்றதாக குற்றவாளிகளில் ஒருவனான பிரோஸ்இஸ்மாயில் வாக்குமுலம் அளித்துள்ளார்.
கோவையில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என 5 பேரை கடந்த 24-ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நேற்று அவர்கள் 5 பேரை அவரவரது வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
இவர்களில், பிரோஸ் இஸ்மாயில் அளித்துள்ள வாக்குமூலம் திடுக்கிட வைக்கும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முபினுடன் சேர்ந்து நாங்கள் திட்டம் தீட்டி வந்தோம். தீபாவளிக்கு முந்தைய நாள் எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பகுதியில் சதி திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டோம். இதற்காகத்தான் முபின் காரில் திட்டமிட்டு, வெடிபொருட்கள் மற்றும் சிலிண்டருடன் புறப்பட்டு சென்றான். ஆனால், எங்கள் எண்ணம் நிறைவேறவில்லை. காரிலேயே முபின் பலியாகி விட்டான். இதனால் நாங்களும் போலீசில் சிக்கிக்கொண்டோம்.
இலங்கையில் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த முகமதுஅசாருதீன், கேரளாவை சேர்ந்த ரசீத் அலி இருவரையும் கேரளா சிறையில் சென்று சந்தித்தோம். அப்போது, கோவையில் குண்டுவைப்பது தொடர்பாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பின்போது நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக பல விஷயங்களை பேசிக்கொண்டோம். வெடிமருந்துகளை கூரியரில் வாங்கினால் போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலேயே ஆர்டர் செய்து வாங்கினோம். வெடி மருந்துகளுக்கு தேவையான கரித்தூள் உள்ளிட்ட சில பொருட்களை மாவு மில் ஒன்றில் அரைத்து வாங்கினோம். அதனை முபினின் வீட்டில் சேகரித்து டிரம்மில் போட்டு வைத்தோம். வெடிபொருட்களுடன் சேர்த்து சிலிண்டரையும் வெடிக்க செய்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதினோம். ஒரேநேரத்தில் வெடிபொருட்களுடன் சிலிண்டரையும் சேர்த்து வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். இதற்காக கோவையில் சில இடங்களையும் தேர்வு செய்து வைத்திருந்தோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.