

பேரழகன்..,
உனது ஞாபகங்கள்
எனக்கிட்டிருக்கும் முடிச்சுகளை
எதனாலும்
அவிழ்த்து விட முடிவதில்லை..
தொங்கல் தென்படாத
ஒரு தொலைதூரப் பாலைவனமாய்
நீண்டு கிடக்கின்றன எனது இரவுகள்..
நீ கனவினில் இட்டுச் சென்ற
முத்தங்களின்
தடயங்கள் ஏதும்
கிடைக்கின்றனவா என்று
ரகசியமாய்
உளவு பார்த்துத் திரிகின்றன
எனது விரல்கள்…
நீயும் நானும் பேசி சிரித்த
பொழுதுகளின் சாயம்
வெளுத்துப் போகாமல்
அப்படியே புன்னகைக்கின்றன..
நீ அதிஷ்டக்காரனாம்
நண்பர் குழாமுக்குள்
கதையடிபடுகிறது
யார் அந்த பேரழகன் என்று
பேரதிஷ்டக்காரி நானென்று
அவரறியார்..
அறியாமலே இருந்து விட்டுப் போகட்டும்..

கவிஞர் மேகலைமணியன்

