• Wed. Mar 19th, 2025

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

உன் குரல் கேட்டவுடன்
யாரும் பேசாமல் துண்டிக்கப்பட்ட
உன் வீட்டு தொலைபேசி அழைப்புகள்
எல்லாம் என்னால்தான் அழைக்கப்பட்டன….

யாரோ கூப்பிட்டதாய் நினைத்து
நீ திரும்பி பார்த்த
யாருமற்ற வீதியின் ஓரங்களிலெல்லாம்
நான் தான் நின்று கொண்டிருந்தேன்…

ஒரு நாள் திடீரென்று
உன் வீட்டு வாசலில் பூத்துச் சிரித்த
ரோஜா செடியை….
கொண்டு வைத்தவருக்கு
நீ நன்றி சொன்ன பொழுதில்

எனக்குள் நிஜமாய் பூ பூத்ததெல்லாம்
உனக்கு தெரிய வாய்ப்பில்லைதான்
என்றாலும்…

யாரோவாகவே உன்னை தொடர்ந்து
கொண்டிருப்பதும்…
நீ பார்க்காமலேயே…
உனக்குள் யாரோவாக நானிருப்பதும்
பிடித்துதானடா இருக்கிறது எனக்கும்…
எப்பொழுதுமே நீ என் மலராக
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்