விருதுநகர் மாவட்டம் சிவகாசிஅருகே உள்ள குகன்பாறை கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கேசவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர காவலாளியாக விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மற்றொரு காவலாளியாக குகன்பாறை கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 55) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவலாளி கருப்பசாமியை பட்டாசு ஆலை உரிமையாளர் கேசவன் வேலையில் இருந்து நீக்கியதாக தெரிய வருகிறது.
தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு உடன் பணியாற்றும் மோகன்ராஜ் தான் காரணம் என பலி வாங்கும் நோக்கத்துடன் சென்ற கருப்பசாமி நேற்று பட்டாசு ஆலைக்கு சென்றபோது, அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த மோகன்ராஜ் தலையின் மீது கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். மேலும் ஆத்திரம் குறையததால் தான் கொண்டு வந்த கட்டையால் சாராமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் உடனடியாக அந்த இடத்தை விட்டு கருப்பசாமி தப்பி ஓடியுள்ளார்.
பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மோகன்ராஜ் உயிரிழந்து கிடந்ததை கண்டு வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன், குருநாதன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு வீட்டில் பதுங்கி இருந்த கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்து விட்டு வீட்டில் பதுங்கி இருந்த கருப்பசாமி கைது
