கர்நாடாகாவில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவை உண்மையல்ல என்று மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர்கடந்த 8-ம் தேதி 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நிஜமல்ல கற்பனை புராணங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை பற்றி தகவல் அறிந்த பாஜக, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகியஅமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடி, ராமர் கோயில் பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியை அவதூறாக பேசியதால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.
இதனைத் தொடர்ந்து செயின்ட் தெரேசா பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி அனிதா விடுத்த அறிக்கையில், ‘‘எங்களது பள்ளியில் இதுவரை வகுப்புவாத விவகாரம் குறித்து எந்த புகாரும் எழவில்லை. தற்போது துரதிருஷ்டவசமாக ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் மீது சில பெற்றோர் நம்பிக்கையை இழந்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை தக்க வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இதிகாசங்கள் பற்றி தவறாக பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம்
