கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை என அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட கம்மவார் சங்கம் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் பீளமேடு கிளை தலைவர் பூவே கோபால் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் பீளமேடு ஜி.வி ரெசிடென்சி அருகே பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் எங்கள் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எங்களது சங்கத்தின் விதி.
அவ்வாறு இருக்கும் போது சங்க நிர்வாகிகளை கலந்த ஆலோசனை செய்யாமல் பூ.வே கோபால் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எனவே அவரை நாங்கள் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு எங்கள் ஆதரவு இல்லை. மாற்றாக எங்கள் சமூகத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். மேலும் எங்களது ஆதரவு அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் சமுதாயத்தினர் போட்டியிடும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என தெரிவித்தனர்.