திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யூனியன் கோம்பைப்பட்டி கிராமம் பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள கன்னி மூல கணபதி, காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

காசி ராமேஸ்வரம்,திருச்செந்தூர், அழகர்கோவில், திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் அழைக்கப்பட்டு கோயிலை சென்றடைந்தது. கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி,யஜமான் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
இரண்டாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து கோயிலின் உச்சியில் விமானத்தை சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் விமானத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் குலவையிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம்,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பக்தர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அறு சுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பெருமாள் கோவில்பட்டி, கோம்பைப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, எல்லப்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெருமாள் கோவில்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.