புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் ஐம்பெரும் விழாவான முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா 10.3.2026 முதல் 14.3.2026 வரை நடைபெற்று வருகிறது.

இன்றைய நான்காம் நாள் நிகழ்வாக ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கி. நிர்மலா தலைமை உரையாற்றி பின்னர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் சிவகங்கை அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் பானுமதி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையில் மாணவிகள் சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு தனித் திறமைகளையும் தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னாள் மாணவியர் சங்கம் சார்பாக இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவிகளுள் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு மெகபூப் பீவி பரிசுகளும் சாஹிர் ஹுசைன் மற்றும் சாரா ஹுசைன் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் அனைத்து துறைகளிலும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிவிழா பரிசும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் மற்றும் முதல்வர் ஆகியோர் வழங்கினார்கள்.முன்னதாக வேதியல் துறை தலைவர் பொறுப்பு பேரவை பொறுப்பு முனைவர் மேரி ஹெலிதா வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவை தமிழ் துறை இணை பேராசிரியர் முனைவர் கா. யோகாம்பாள் மற்றும் உதவி பேராசிரியர் திருமதி வே. முத்தமிழ், முனைவர் செந்தாமரை மற்றும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சகாய சோபியா ஆகியோர் ஒருங்கிணைத்து வழி நடத்தினர். மேலும் இந்நிகழ்வினை வேதியல் துறை பேராசிரியர் செல்வராணி தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கல்லூரியில் பணிபுரிந்த முன்னாள் பேராசிரியர்கள் திருமதி மணிக்கிளி, திருமதி செல்லம்மாள், முனைவர் முத்தம்மை ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மாணவிகள் ஒருபோதும் மறக்க கூடாது தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று வாழ்த்துரையில் வலியுறுத்தினார்கள். நிறைவாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம் முதலான நிகழ்வுகள் நடைபெற்று ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.



