• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வருமானவரித்துறை அதிகாரி என்று நகை வழிப்பறி..,

ByVasanth Siddharthan

Apr 30, 2025

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெரும்பு சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). சுள்ளெறும்பு நால்ரோட்டில் மளிகைகடை வைத்துள்ளார்.

இவர் அரசு பள்ளி ஆசிரியரான தனது மருமகளை ஒட்டன்சத்திரம் தாலுகா கொல்லபட்டியில் உள்ள அரசு பள்ளியில் இறக்கிவிட்டு மீண்டும் தனது கிராமத்தை நோக்கி மொபெட்டில் வந்து கொண்டிருந்தார்.

வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களின் எல்லை மேடு பகுதியை தாண்டி வந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் இவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் தாங்கள் வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பணம் வைத்து உள்ளீர்கள் என்றும் கூறி அவரை மிரட்டி அவரது வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

பின்பு கைவிரலில் அணிந்து இருந்த ஒன்னேகால் பவுன் மோதிரத்தை கழட்டி வாங்கிக் கொண்டு வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு உங்களை விசாரணை நடத்த வேண்டும் உங்கள் ஊருக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து செய்வதறியாத திகைத்து நின்ற பழனிச்சாமி தனது ஊருக்கு வந்து விசாரித்த பொழுது அங்கு யாரும் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்பொழுதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து போலியான வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிய நபர் மீது வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி மளிகை கடை உரிமையாளரிடம் நகையை வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.