ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்ககப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.
படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் சூர்யா மற்றும் சிவகுமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு..!
