காரியாபட்டி அருகே கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை பகுதியை சேர்ந்தவர் 22 வயதான ஜெகன். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் தாய் வளர்ப்பில் வளர்ந்து +2 முடித்து இராணுவம் மற்றும் காவல்துறையில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.
மேலும் கபடி போட்டியில் சிறந்த வீரராக ஜெகன் இருந்து வந்துள்ளார். குறிப்பாக கபடி போட்டியில் சிறு வயதிலிருந்து ஆர்வத்துடன் விளையாடி அப்பன்ஸ் மற்றும் டிபன்ஸ் விளையாடுவதில் சிறந்த வீரராக இருந்து வந்தார். இவர் தனது அணியான மந்திரிஓடை வாழவந்த அம்மன் கபடி குழுவில் இடம்பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த கோப்பையில் அனைத்தும் மந்திரிஓடை கிராமத்தில் அமைந்துள்ள வாழவந்த அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மதுரை மாவட்டம், பொய்க்கரைப்பட்டியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தனது அணியினருடன் வேறு இடத்தில் விளையாடி அங்கு தோல்வி அடைந்த நிலையில் கபடி வீரர் ஜெகன் மட்டும் பொய்கரைப்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் இடையபட்டி 7 மவுண்டன் கபடி அணி சார்பில் விளையாட கபடி வீரர் ஜெகன் களத்தில் இறங்கினார்.

அவர் கபடி கபடி என கூறிச் சென்ற போது எதிர் அணியினர் அவரை சுற்றி வளைத்து அழுத்திப் பிடித்து தூக்கி எறிந்தனர். இதையடுத்து மைதானத்தில் மயக்கமடைந்த அவரை சக வீரர்கள் தண்ணீர் கொடுத்து தூக்கி உள்ளனர்.
கபடி வீரன் ஜெகன் எந்திரிக்காத நிலையில் பதறிப் போன சக விளையாட்டு வீரர்கள் அவரை உடனடியாக மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கபடி வீரருக்கு தலையின் பின்புறம் சுவாசநரம்பு, கொண்ட நரம்பு செயல் இழந்து விட்டதாக கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி கபடி வீரர் ஜெகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கேட்டு சக விளையாட்டு வீரர்கள் சாரை சாரையாக குவிந்து கதறி அழுதி அமரர் ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மந்திரிஓடை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.


உயிரிழந்த கபடி வீரர் ஜெகனுக்கு அஞ்சலி செலுத்த மதுரை, விருதுநகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் குவிந்து கதறி அழுது அஞ்சலி செலுத்தனர்.


கபடி போட்டியில் விளையாடி மைதானத்திலே மயங்கி விழுந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




