• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மக்களின் கனவு நினைவாகவுள்ளது…

Byகாயத்ரி

Nov 22, 2021

மதுரை மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் விரைவில் துவங்கும் வகையில், டெண்டர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. தென்மாவட்ட மக்களுக்கு அதிகம் வந்து செல்லும் முக்கிய நகராக விளங்கும் மதுரையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனாலும், மதுரை நகரத்தில் சாலை போக்குவரத்தை தவிர இதர போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பகல் நேரங்களில் பெரும்பாலான சாலைகள் எப்போதும் பரபரப்புடனும், போக்குவரத்து நெருக்கடியுடனும் காணப்படுகின்றன.

20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாநகரத்தில் விரைவாக அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் சாலை போக்குவரத்தை தவிர்த்து மாற்று திட்டத்தை முன்னிறுத்திக் கொண்டே இருந்தன. மதுரை நகரத்து போக்குவரத்து நெரிசலுக்கு ஒரே தீர்வு மெட்ரோ ரயில் அல்லது சென்னையைப் போல புறநகர் ரயில் சேவை தான் என்ற நிலை கட்டாயமானது. இதுகுறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திட்ட பகுதிகள், பயணிகள், அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்காலத் தேவை மற்றும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து 4 மாதத்தில் திட்ட அறிக்கையை வழங்க வேண்டுமென டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வு திட்டங்களையும் கருத்தில் கொள்ளவுள்ளனர். பொது போக்குவரத்து தடங்கள், மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்தும் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன. மதுரை உள்ளூர் திட்ட குழும பகுதி, பல்கலை நகர் புதிய நகர மேம்பாட்டு ஆணைய பகுதி, திருப்புவனம் உள்ளூர் திட்டப் பகுதி மற்றும் மேலூர் உள்ளூர் திட்டப் பகுதி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன.

டிசம்பர் இரண்டாம் வாரத்தில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான பணிகள் முடிவடையவுள்ளன. இதன்பிறகு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
‘திருமங்கலத்தில் இருந்து மேலூர் வரை…
சமூக ஆர்வலரும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தவருமான கே.கே.ரமேஷ் கூறியதாவது:தென்னிந்தியாவில் முக்கிய சுற்றுலா நகரமாக மதுரை விளங்குகிறது.

மதுரையை நான்கு திசைகளில் இருந்து இணைத்திடும் வகையில் திருமங்கலத்தில் இருந்து மேலூர் வரையிலும், திருப்புவனத்தில் இருந்து செக்கானூரணி வரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதில் எந்த சிரமமும் ஏற்படாது. தேவையான இடங்களில் ரயில் நிலையம் அமைப்பதற்கான இடங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அவசியம். தேவையான இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது சுலபமான பணி. எனவே, சாத்தியக்கூறுகளுக்கான ஆய்வுப் பணிகளை விரைவில் முடித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் இணைத்திடும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.