• Tue. May 7th, 2024

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு..!

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்.
வானவியல் ஆய்வுகள் குறித்து பள்ளி மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், மாநில அளவிலான ‘லூனார் கேம்ப்’ போட்டிகள் நடைபெற்றது. கோயம்புத்தூரில், ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிலவில் நடக்கும் ஆய்வுகள், அது சார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் குறித்து லூனார் கேம்ப் போட்டிகள் நடத்தப்பட்டது. எழுத்து தேர்வு, செயல் திட்டம் தயாரித்தல், செயல் திட்டத்தினை விளக்குதல் என மூன்று பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது. போட்டியில் விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வடமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஜேசிஸ் மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராவ்பகதூர் ஏ.கே.டி.ஆர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து பள்ளி மாணவர்களுடன் விஞ்ஞானி இளங்கோவன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்றைய மாணவர்கள் நிலவியல் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வருங்காலத்தில் வானம் இந்திய மாணவர்கள் கையில் இருக்கும் என்றும் விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *