

காஞ்சி சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சால்வையை தூக்கிப் போடுவது என்பது ஆச்சாரங்களின்படிதான்; அது அவமானமே இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்றிருந்தார். அவருக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சால்வையை கையில் கொடுக்காமல் தூக்கிப் போட்டார். இது தொடர்பான வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.காஞ்சி சங்கராச்சாரியாரின் செயல் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டது. அதேநேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கையில் பணிவுடன் முந்தைய சங்கராச்சாரியார் சால்வை வழங்கும் படங்களுடன் ஒப்பிட்டும் விமர்சிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தமிழிசைவுக்கு சால்வையை கையில் வழங்கும் படத்தை பதிவு செய்து இதுதான் சுயமரியாதையை மதிக்கும் திராவிட மாடல் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
கோவிலில் கர்ப்பகிரகத்துக்குள் போகாமல் வெளியே நின்றுதான் சாமி கும்பிடுகிறோம். அதேபோல் அந்த மடத்துக்குப் போகிறவர்கள் அந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும். சட்டசபைக்கு உறுப்பினர்கள்தான் போக வேண்டும். அதை ஏற்றுக் கொண்டுதான் செல்கிறோம் அல்லவா? சில நடைமுறைகள் இருக்கின்றன… அங்கே ஆச்சாரங்கள் இருக்கின்றன. ஆச்சாரங்களுடன் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விதி. சட்ட திட்டம். இதனை அவமரியாதையாக நான் பார்க்கவில்லை.
