• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

காவல் துறையினருக்கே இந்த நிலைமையா?” போலீஸாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி..,

BySeenu

Jul 7, 2026

கோவையில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபரை எச்சரிக்கச் சென்ற போலீஸ்காரரையே, அந்த ஆசாமி ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டி அனுப்பிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க போலீஸார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புறநகர்ப் பகுதியில் போலீஸ் பிடி இறுகியதால், போதை ஆசாமிகள் பலர் தற்போது கோவை மாநகரப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மாநகரப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே மறைமுகமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​கோவை, சவுரிபாளையம் பிரிவில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் சாலையில், நள்ளிரவு 12:30 மணிக்கும் மேலாகச் சிகரெட், வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகள் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் நள்ளிரவில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அஞ்சி நடுங்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

​இந்நிலையில், நேற்று நள்ளிரவு சவுரிபாளையம் பிரிவு பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி, பொதுமக்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி வந்து உள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி நபர் ஒருவர், தனது செல்போனில் அதனை வீடியோ எடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் போதை ஆசாமி, வீடியோ எடுத்தவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.

​நிலைமை மோசமாவதைக் கண்டு பயந்த பொதுமக்கள், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் இருவர் அங்கு வந்து உள்ளார். அவர் அந்த வாலிபரை எச்சரித்து அங்கு இருந்து செல்லுமாறு கூறியதுடன், வீடியோ எடுத்த நபரை மிரட்டியதால் அவனது செல்போனைத் தரும்படி கேட்டு உள்ளார்.

​இதில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த அந்தப் போதை ஆசாமி, காவலர் என்றும் பாராமல் ஆபாசமாகத் திட்டியதோடு,
​“எதுக்கு என் போனை கேக்குற ? நான் தப்பு பண்ணல… என் மேல ஒரு வார்த்தை தப்பா சொல்ல முடியாது! என்னை எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ… என் மேல தப்பு இல்ல. நாளைக்குக் காலையில உன்னை பாத்துக்கலாம்… சத்தியமா பாப்போம், கண்டிப்பாகப் பார்ப்போம்!” என்று காவலரையே நடுரோட்டில் வைத்து மிரட்டி, அதிரடி அளப்பறையில் ஈடுபட்டான்.

​கஞ்சா போதையில் இருந்த அந்த வாலிபரிடம் நீண்ட நேரம் போராடிப் பார்த்த காவலர், அவன் கட்டுப்பாடின்றி மிரட்டியதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல், அங்கு இருந்து நகர்ந்து சென்று விட்டனர்.

​பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரையே போதை ஆசாமி மிரட்டி அனுப்பியதைக் கண்டு, அங்கு இருந்த பொதுமக்கள் உறைந்து போயினர்.

“காவல்துறைக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களாகிய நாங்கள் யாரிடம் போய் புகார் கூறுவது ? எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது ?” என்று சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் தற்பொழுது கடுமையான அச்சத்துடன் புலம்பி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.