• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மின்சாரத்துறை அமைச்சர் சொந்த கிராமத்திற்கு அருகிலேயே இவ்வளவு அவலமா?

ByP.Thangapandi

Jun 18, 2026

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் கிராமத்தில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார வசதி இன்றி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

​இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், அவர்களின் வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தன.

​இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

​வீடு கட்டும் பணிகள் முடிவடையும் வரை தற்காலிகமாகத் திருமண மண்டபத்தில் தங்கியிருந்த மக்கள், வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு வேறு வழியின்றி, மின்சார வசதி கூட இல்லாத நிலையிலேயே குடியேறியுள்ளனர்.

​தேர்தல் காலத்தைக் கணக்கில் கொண்டு, ஒப்பந்ததாரர் பணியை அவசரமாக முடித்துவிட்டு, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​கடந்த நான்கு மாதங்களாக மின்சாரமின்றி அந்த வீடுகளில் வசித்து வருவதால், இரவு நேரங்களில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தியும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு ஒன்றில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

​வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் தங்களுக்குக் கல்வியே வாழ்வாதாரமாக உள்ள நிலையில், மின்சாரஞ வசதி இல்லாததால் மாணவர்களின் படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

​தற்போதைய மின்துறை அமைச்சரின் சொந்த கிராமம் நடுமுதலைக்குளம் அருகிலேயே முதலைக்குளம் கிராமத்தில் இத்தகைய அவலநிலை நீடிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​எனவே, பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.