• Sat. Apr 27th, 2024

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் கால வரலாறு திரும்புகிறதா..இரட்டை இலைச்சின்னம் கிடைக்குமா..,எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..!

Byவிஷா

Feb 3, 2023

அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் சூழலில், அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைச் சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில், தனி சின்னத்திலாவது போட்டி வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முனைப்பு காட்டி வருகிறார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக செந்தில் முருகனும் போட்டியிடுவார்கள் என அறிவித்திருக்கின்றனர். எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த சூழலில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால், அதிமுகவில் 1988ன் வரலாறு திரும்புகிறது. 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியில் ஏற்பட்ட பிளவால், 1988 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் களம் கண்டனர். 35 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. இந்த வேளையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்தனிச் சின்னங்களில் போட்டியிட்டால், அது அதிமுகவிற்கு உள்ள வாக்கு வங்கியை பெருமளவில் சிதற வைத்து விடும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் தரப்புக்கு சின்னம் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு, சின்னம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெறவுள்ள விசாரணையில் உச்சநீதிமன்றம் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமா? இரட்டை இலை சின்னத்தை முடக்குமா? என்ற அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர் அ.தி.மு.க.வின் இரு தரப்பு தொண்டர்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *