• Wed. Jun 25th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

எலக்ட்ரிக் பைக் ஆபத்தா..? குழப்பத்தில் பொதுமக்கள்.. பீதியில் இ-பைக் நிறுவனங்கள்…

Byகாயத்ரி

Mar 30, 2022

அடுத்தடுத்து எலக்ட்ரிக் பைக்கில் தீ பிடிக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கண் முன் அதிகரித்து வரும் நிலையில் மூன்றில் ஒரு பங்கினர் எலக்ட்ரிக் பைக்கையே நாடும் நிலையில் இப்படி ஒகு நிகழ்வு மக்களின் மனதில் மாற்றத்தை கொண்டு வருமா..?? இதன் காரணமாக எலக்ட்ரிக் பைக்கின் மீதுள்ள ஆர்வம் குறையுமா..?? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த போட்டோகிராஃபர் துரைவர்மா என்பவர் சில தினங்களுக்கு முன்பு புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த மார்ச 26-ம் தேதி அதிகாலை தனது வீட்டில் நிறுத்தி சார்ஜ் செய்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் துரைவர்மா மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் ஓயும் முன்னரே திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு 90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக்கை வாங்கியுள்ளார். தேவராஜ் வெளியூருக்கு சென்ற நிலையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் கடந்த மார்ச் 28-ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த மற்றோரு பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த தேவராஜ் தாய், மனைவி மற்றும் மகன் ஆகியோர் பின்வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

பின் அதே நாளில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் பகுதியை சேர்ந்த முருகேஷ் சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு சென்றுள்ளார். ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பெரும் சேதம் இல்லமால் தவிர்க்கப்பட்டது.

இதெல்லாம் போக நேற்று சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவிட்டு மாலை பணி முடிந்து தனது தந்தையின் இருசக்கர வாகனமாக எலக்ட்ரிக் பைக்கில் மாதவரம் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாகனத்தில் வித்தியாசமான சத்தம் வந்ததை கேட்டு அச்சமடைந்த கணேஷ் சாலையோரமாக பைக்கை நிறுத்திய உடன் அதிலிருந்து இருந்து புகை வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த கணேஷ் அங்கிருந்து விலகிச்சென்றார்.

இந்த தொடர் சம்பங்வங்களால் பொதுமக்களிடையே எலக்ட்ரிக் பைக் பாதுக்காப்பானதா என்ற அச்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரையில் அந்தந்த நிறுவனங்கள் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே சார்ஜ் செய்ய வேண்டும் , வாகனங்கள் பாரமரிப்பு குறித்து நன்கு அறிந்த பிறகு இ-பைக்குகளை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளால் எலக்ட்ரிக் பைக்கின் பயன்பாடு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதனால் பல எலக்ட்ரிக் பைக் நிறுவனங்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.