

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 10 அணிகள் களம் காண்கின்றன. இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 2018 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
