தமிழகத்தில் ஐ போன் தொழிற்சாலையை அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அமைந்துள்ள விஸ்ட்ரானின் ஐபோன் உற்பத்தி ஆலையை 125 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,050 கோடிக்கு டாடா குழுமம் கையகப்படுத்தியது. இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டு ஐபோன் உற்பத்தி நிறுவனமாக இருந்தது. இந்த நிலையில் ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, தமிழகத்தின் ஓசூர் நகரத்தில் இரண்டாவது ஐபோன் ஆலையை அமைக்க டாடா திட்டமிட்டுள்ளது.
இப்புதிய ஆலை சுமார் 20 அசெம்பிளி லைன்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் இந்த புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று தகவறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள மற்ற ஆலைகளுடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் ஐபோன் ஆலை நடுத்தர அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இது 10,000 ஊழியர்களைக் கொண்ட விஸ்ட்ரானை விட பெரியதாக இருக்கும். இருப்பினும், சீனாவில் ஃபாக்ஸ்கானைவிட இது சிறியதாகவே இருக்கும். புதிய ஆலை அமைக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து, டாடா குழுமம் ஓசூரில் உள்ள அதன் தற்போதைய ஆலைகளில் ஆட்சேர்ப்பை அதிகரித்து வருகிறது.
ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காகவே பிரத்யேகமான 100 சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்கும் திட்டத்தையும் டாடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தயாரிப்பு பணிகளுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே ஐபோன் 15 மாடல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.