• Wed. Oct 16th, 2024

புயலை காரணம் காட்டி பச்சை நிற பால்பாக்கெட் நிறுத்தம்..!

Byவிஷா

Dec 9, 2023

மிக்ஜாம் புயலை காரணம்காட்டி பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு ஆவின் டிலைட் பால் விற்பனைக்கு ஆவின் நிர்வாகம் முக்கியத்துவம் தருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி பதிவிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில்..,
மிக்ஜாம் புயல் தாக்கத்தின் இயற்கை பேரிடரை பயன்படுத்தி 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அதே விற்பனை விலை கொண்ட 3.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள டிலைட் பாலினை விநியோகம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இதுவரை அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளும் 12லிட்டர் (500மிலி 24பாக்கெட்டுகள்) என்கிற அளவில் பிளாஸ்டிக் டப்புகளில் விநியோகம் செய்து வந்த சூழலில் இன்று டிலைட் பால் பாக்கெட்டுகளை 48லிட்டர் (500மிலி 96பாக்கெட்டுகள்) என்கிற அளவில் பாலிதீன் மூட்டைகளில் விநியோகம் செய்துள்ளது.
4 டப்புகளில் விநியோகம் செய்ய வேண்டிய 96 பால் பாக்கெட்டுகளை (500மிலி) ஒரே மூட்டையில் போட்டு காய்கறிகளை மூட்டையாக கட்டி கொண்டு வருவது போல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவில் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட்டு பால் முகவர்களுக்கு பெருத்த நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பால் பாக்கெட்டுகளின் குளிர்நிலை மிகவும் குறைவாக இருப்பதால் அவை விரைவில் கெட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளதோடு, பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் பால் முகவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது ஆவின் நிர்வாகம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *