மன ரீதியாக காவல்துறையை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பியூசிஎல் மாநிலத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி அளித்துள்ளார்.
ரவுடிகளாய் திரிந்தவர்கள் எல்லாம் காவலர்களாய் மாறிவிட்டால் அந்தத் துறைக்கு என்ன மரியாதை இருக்கும். தன்னுடைய பாதுகாப்புக்காக மட்டுமே காவல்துறை என அரசாங்கம் எண்ணுவது மிகத் தவறு. மனரீதியாக காவல்துறையை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என மக்கள் சிவில் உரிமை கழக மாநில தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கி உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் காவல்துறையை தமிழக அரசை கண்டித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து முதல் முதலாக கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டது மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
அதன் அடிப்படையில் pucl இன் மாநில தலைவரும், பேராசிரியருமான முரளி மேற்கண்ட சம்பவம் குறித்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அவரது உரை பின்வருமாறு,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவில் தற்காலிக காவலாளி பணியில் இருந்த அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துச் சென்று பலத்த தாக்குதலை நடத்தி அவரை கொலை செய்திருக்கிறார்கள். இது மிக, மிக அதிர்ச்சியான துயரமான சம்பவம். இதனை தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் காவல் துறை என்பது சற்று கூட அறிவை பயன்படுத்தக்கூடாது. வன்முறையை மட்டும் தான் பயன்படுத்தி விஷயங்களை கிரகிக்க வேண்டும் என்று நினைக்கிறது. இதுவந்து மிக கொடுமையான விசயம். ஜனநாயக நாட்டில் ஒரு விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தெரியாத காவலர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைத்திருக்கிறார்கள்.
அதுபோன்ற ஒரு சிறப்பு குழு தான் அஜித் குமார் விஷயத்தில் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது. அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் காரில் இருந்த நகையை, பணத்தை திருடி இருக்கக்கூடும் என்பதுதான். இது போன்ற சம்பவங்களில் அடிப்பது என்பது சட்டப்படி அனுமதிக்காத ஒன்றாகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் இது போன்ற சம்பவம் 24 நடந்திருப்பதாக கூறப்படுகிறது. புழல் சிறையில் இது போன்று 300 கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் சிலர் கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக, திமுக இரண்டும் அதிகாரத்தில் இருந்தாலும் கூட காவல்துறை தங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை தான் உள்ளது. முதலில் இதனை மாற்றி ஆக வேண்டும். இதற்காகத்தான் தேசிய மனித உரிமை ஆணையம் பல்வேறு விதிமுறைகளை சட்டங்களை வகுத்துள்ளது. இதற்கான ஒழுங்குமுறை மற்றும் விதிமுறைகளை எங்களது மக்கள் சிவில் உரிமை கழகம் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்றுள்ளது.
ஆனால் இந்த விதிமுறைகளை எவற்றையும் செயல்படுத்த தயாராக இல்லை என்று நினைக்கும் போது, இது குறித்து எல்லாம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. போக்குவரத்தில் மஞ்சள் கோட்டை தாண்டினாலே உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கிறார்கள். இந்த நேர்காணலை நான் வழங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் எத்தனை காவல் நிலையத்தில் எவ்வளவு பேர் துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்களோ என்பது தெரியவில்லை.
ஒரு குற்றவாளியிடம் உண்மையை வரவழைப்பதற்கு உலக அளவில் அடிப்படையான சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் பின்பற்றாமல், அஜித் குமார் விஷயத்தில் சிறப்பு குழு தெருத்தெருவாக கொண்டு சென்று அடித்துள்ளார்கள். இது இந்த வடிவேலு படத்தில் வருகின்ற நகைச்சுவை காட்சியை ஒத்ததாக இருக்கிறது. பலர் முன்னிலையில் வைத்தும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு இது அதிகார துஷ்பிரயோகம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தற்போது நிறைய அமைப்புகள் கட்சிகள் எதிர்க்குரல் கொடுத்ததால் காவலர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதான் உண்மை. ஒரு அடி விழுந்தாலே எவ்வாறு வன்முறையோ அது போன்று இது கொலை சம்பவம் தான். மக்கள் கொடுக்கின்ற அழுத்தத்தின் அடிப்படையில் தான் அடுத்தடுத்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வாய்ப்பு உண்டு. இது போன்ற சம்பவங்களில் தொடக்கத்தில் நிகழும் பரபரப்பு குறைந்து இரண்டு ஒரு நாட்களில் பொதுமக்களும் மறந்து விடுகிறார்கள். அது இது போன்ற விசாரணை குழுவுக்கு வசதியாக உள்ளது.
48 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் நிகழ்ந்த இந்த இழப்பை தெரிவித்தாக வேண்டும் என்பது தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்று. ஆனால் அவ்வாறு தெரிவித்தார்கள் என்பது தெரியவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில் அவர்கள் தான் பாரபட்சமில்லாமல் விசாரணையை நடத்தி முடிப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
இது போன்ற சம்பவங்களுக்கு பன்னாட்டு அளவில் ஐநா அவையும் கூட சில விதிமுறைகளை வகுத்துள்ளது. பல வெளிநாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன அதில் குற்றவாளிகள் எவ்வளவு கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள். ஒரு குற்றவாளியின் உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என அங்குள்ள காவலர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் குமார் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும் பொழுது மிகக் கொடூரமாக உள்ளது. உடலின் 18 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகுக்கு பின்புறம் உள்ள காயமும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதயத்தின் நேர் பின்புறம் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பத்து பவுன் நகையை மீட்பதற்காக காவலர்கள் வெறிகொண்டு அஜித்குமாரை தாக்கியுள்ளனர். எந்த மனநிலையில் காவலர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு. இதனை தமிழக அரசு எவ்வாறு கையாளப்போகிறது? திமுக அரசு தன்னுடைய ஆட்சியில் இது போன்று நடப்பதை நிச்சயம் கண்டிப்பாக வேண்டும்.
மனித உரிமை குறித்த விதிமுறைகளை அனைத்து காவல் நிலையத்திலும் மிகப்பெரிய பதாகையில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உள்ளது. அதே போன்று அனைத்து காவலர்களுக்கும் மனித உரிமை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கென்று தனியாக நிதி ஒதுக்கி உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். உரிமை மீறலில் காவல்துறையினர் ஈடுபடுவார்களே ஆனால் அதனை விசாரிக்க கூடிய தனிதீர்ப்பாயம் உருவாக்குவதும் அவசியம். இதற்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். ரவுடிகளை திரிந்தவர்கள் எல்லாம் காவலர்களாய் மாறிவிட்டால் அந்தத் துறைக்கு என்ன மரியாதை இருக்கும். தன்னுடைய பாதுகாப்புக்காக மட்டுமே காவல்துறை என அரசாங்கம் எண்ணுவது மிகத் தவறு. மனரீதியாக காவல்துறையை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் அதேபோன்று சட்டமிரலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் அவசியம் என்றார்.