புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் என்று அறிவித்துக் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விழா கொண்டாட்டம் நடத்தும் பலரும் அதை மையப்படுத்தி ஒரு வார காலத்தில் தங்கள் வசதிக்கேற்ப மகளிர் தினத்தை கொண்டாடுவது நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் இணைந்து உலக மகளிர் தினத்தை இன்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்வுக்கு தலைமை மருத்துவர் மு. பெரியசாமி தலைமை வகித்தார். டாக்டர்.லதா முன்னிலை வகித்தார். இதில் மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர் லதா, செவிலியர் ஐஸ்வர்யா, மருந்தாளுநர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

அப்போது தனது தலைமை உரையில் மருத்துவர் மு. பெரியசாமி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி பெண்களை போற்றும் விதமாக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களே வீட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியமான காரணமாக உள்ளனர். இதற்கு பெண் கல்வி இன்றியமையாததாக உள்ளது. பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரியும் சிறப்பைப் பெற்றுள்ளனர். பாலின சமத்துவம், படிப்பில் சமத்துவம், பணியில் சமத்துவம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக உள்ளது.

இது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.ஆகவே பெண்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கான உரிமைகளைக் கொடுப்பதும் நம் கடமையாகும் என்றார். இந்த நிகழ்வில் மேலும் மருத்துவர்கள் துரைராஜ், செவிலியர்கள் ராம லட்சுமி, ராஜலக்ஷ்மி,, ராஜாத்தி, ஐஸ்வர்யா, கனகா, காவியா, ஆய்வக நுட்புணர் கணேசன், பூபாலன், கதிரவன் மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் செவிலியர் கீதா நன்றி கூறினார்.




