

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்து, பொருளாதார நிபுணர்களைன் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 4.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று பகிர்ந்துள்ளது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான (2011-12) விலையில் ஜிடிபி ரூ 43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 40.35 லட்சம் கோடியாக இருந்தது, இது 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது.
மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதாக அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவீதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவீதம்) எஃப்ஒய் 24 இல் ஜிடிபி வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நட்சத்திர வளர்ச்சி 8.4 சதவீதமாக இருப்பதற்கு இந்தத் துறைகளின் வளர்ச்சியும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

