• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை, திருப்பூரில் விசைத்தறிகள் முடங்கின- காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

ByP.Kavitha Kumar

Mar 19, 2025

கூலி உயர்வு, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் விசைத்தறி ஆலைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சோமனூரில் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தலைவர் பூபதி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம், கட்டட வாடகை, உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக கூலி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பேச்சுவார்த்தை மூலம் மின் கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். கூலி உயர்வுக்கு சட்டப்பூர்வ நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலி உயர்வை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி, 32 முறை மனு கொடுத்தும், பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என்பதால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சொந்த பாவு நுால், நாட்டின் மிஷன், வேன், ஆட்டோ, வேஷ்டி சேலை ரகங்கள் ஓட்டும் விசைத்தறி உரிமையாளர்களையும் ஆதரவு தர கேட்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் அடிப்படையில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ள நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.