• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,

BySeenu

Jul 30, 2026

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

“அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

கணினி அறிவியல் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான முன்னெடுப்புகளும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்றார்.

மேலும், பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், மாணவர்கள் கற்றலுக்கு ஏற்ற சூழலாகவும் பராமரிப்பதற்காக பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் அவர்களிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று கூறினார்.