• Thu. May 2nd, 2024

ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு..!

Byவிஷா

Dec 23, 2023

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களின் விண்ணை முட்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ கோஷத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், மதுரை – மேலூர் சுந்தரராஜ பெருமாள் கோயில், கோவை அரங்கநாதர் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர், அழகர்கோயில் உள்ளிட்ட கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.
ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர். இதைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 12-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முதல் பகல்பத்து திருநாள் நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தின் கடைசி நாளான நேற்றைய தினம் காலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ரங்கநாதரை தரிசிதது வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *