• Sat. May 4th, 2024

விருதுநகரில், ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ இலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆர்வம்…

ByKalamegam Viswanathan

Dec 10, 2023

‘கரிசல் மண்’ணின் பெருமைகளையும், வாழ்வியல் முறைகளையும் இலக்கியத்தில், சிறுகதைகளில், எழுத்தில் வெளிபடுத்திய எழுத்தாளர்களை கொண்டாடும் வகையில் ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகரில், முதன்முறையாக இலக்கியங்களை கொண்டாடும் வகையில் ‘கரிசல் இலக்கிய திருவிழா-2023’ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விழாவை துவக்கி வைத்தார்.
தெற்கத்திச்சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக ‘கரிசல் நிலங்களாக’ உள்ளன.

இந்த கரிசல் பூமியை கதைக் களமாகவும், இங்கு வாழும் மனிதர்களை கதையின் மாந்தர்களாகவும் கொண்டு, இந்தப் பகுதியின் வாழ்வியல் முறைகள், குடும்ப உறவு முறைகள், மகிழ்ச்சி மற்றும் துக்கம், கரிசல் மண்ணில் முளைத்த புதிய வாழ்வியல் முறைகள் குறித்து, இந்த வட்டார மொழியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லியும், எழுதியும் வரும் இலக்கியமே ‘கரிசல் இலக்கியம்’ என்ற பெருமைமிக்கது. இந்த கரிசல் இலக்கியம் குறித்து இப்போதைய தலைமுறையும், வருங்கால தலைமுறையும் அறிந்து கொள்ளும் வைகையில் விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக இந்த கரிசல் இலக்கிய திருவிழா -2023 நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில், சாகித்ய அகாடமி மற்றும் ஜேசிபி இலக்கிய விருது பெற்றவரும், புக்கர் விருதிற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல எழுத்தாளருமான பெருமாள் முருகன் பேசும்போது, தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், மதிப்பையும் சமுதாயம் தரவில்லையே என்ற குறை இருந்து வந்தது. அதனை போக்கும் வகையில் தமிழக அரசு, கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியது. இதற்காக தமிழக அரசிற்கு நன்றி கூறுகிறேன். நிலம், காலம், இயற்கை உள்ளிட்டவற்றை வட்டார இலக்கியங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. நிலத்தை பற்றிய புரிதலும், நிலத்தைப் பற்றிய பின்னணியும் இல்லாமல் எந்த ஒரு கதையையும் எழுத முடியாது என்று பேசினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் காணொலி காட்சியின் வழியாக வாழ்த்துரை வழங்கி பேசினார். எழுத்தாளர்கள் இரா.நாறும்பூநாதன், தமிழ்ச்செல்வன், பாமா, அப்பணசாமி, அமுதா, மதுமிதா, கா.உதயசங்கர், சா.தேவதாஸ், பேராசிரியர் ராமச்சந்திரன் உட்பட பலர் பேசினார்கள். விழா நடைபெற்ற அரங்கில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, பா.செயப்பிரகாசம், கழனியூரன், குரங்குடி முத்தானந்தம், சோ.தர்மன், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், ச.கோணங்கி உள்ளிட்ட கரிசல் இலக்கியத்தில் சிறந்த 137 எழுத்தாளர்களின் புகைப்படங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், வாழ்க்கை குறிப்புகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை, ‘கரிசல் இலக்கிய திருவிழா-2023’ நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு விழா மலரை வெளியிடுகிறார். விருதுநகரில் நடைபெற்று வரும் கரிசல் இலக்கிய திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *