• Sun. Apr 28th, 2024

குமரியின் எட்டு திசைகளிலும், அரசுக்கு எதிராக எழும் கண்டன குரல்கள் ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95_ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 25_ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், 10_ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டு செயல் படுத்த முயன்று வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல், களியாக்காவிளை வரையில், மாவட்டத்தின் 8_திசைகளிலும் இருந்து எதிர்ப்பும், கண்டன குரல்களும் எழுந்து வரும் நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அரசின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவரது தலைமையில் போராட்ட அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரை சந்தித்து பேசியபோது, அவர் தெரிவித்தது..,

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் நேரடியாக மக்களிடம் இருக்கும் அதிகாரத்தை பறித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் செயலாகும்.

ஊராட்சிகளில் வாழும் மக்களில் 90_ சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் கூலிதொழில் செய்து வருகின்றனர்.

அரசின் 100_நாள் வேலை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். அரசின் இந்த முடிவால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி மற்றும் அனைத்து சலுகைகளும் ரத்தாகி கிராமபஞ்சாயத்து மக்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள 25_ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைப்பு,10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இதில் காலம் கடத்தாது உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் கட்சி சார்பில் எனது (சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்) தலைமையில் மாவட்டம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரின் கருத்துக்கு ஆதரவாக, அரசின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேற்புறம் ஒன்றியத்தில் 10_ஊராட்சிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தோவாளையில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன்(திமுக) தலைமையில் வயல்வெளியில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பது_ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் திட்டத்தை கை விட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடம் மனு கொடுத்தனர்.

அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே தொன்கோடியில் வசிக்கும் மக்களின் முன் உள்ள கேள்விகுறியாக உள்ளது. கலவரம், போராட்டம் இல்லாமல் ஒரு அமைதியான சூழல் மாவட்டத்தில் நிலவும் சூழலையே குமரி வாக்காளர்கள் விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *