கடந்த 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளின் போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினரும் பாஜகவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் சார்பில் சிவப்பு நிற பதாகை (Flex banner) ஒன்று வைக்கப்பட்டது. அதில் “சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியுள்ளீர்கள்; உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும், இல்லையென்றால் லத்தி சார்ஜ் மூலம் கலைக்கப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எஃப் (CRPF) வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கள நிலவரம் மாறியது. இதனைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத்தன்று தம்மை எச்சரிக்கும் வகையில் காவல்துறை அமைத்த அதே சிவப்பு நிற பதாகையின் மாதிரியில், பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் ஒரு புதிய பிளக்ஸ் பேனரைத் தயார் செய்து காவல்துறையினருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் கோஷம் எழுப்பினர்.
அவர்கள் ஏந்திப் பிடித்த அந்தச் சிவப்பு நிற பேனரில்,
“சட்டத்தின் ஆட்சி நடக்கிறது! திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையின் முழு பாதுகாப்பு பொறுப்பையும் தமிழக காவல்துறை உடனடியாகவும் சுமுகமாகவும் சி.ஆர்.பி.எஃப் (CRPF)-யிடம் ஒப்படைக்க வேண்டும்!” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகக் காவல்துறை விலகி, சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அப்பதாகையைக் காட்டி பா.ஜ.க-வினர் தீவிர முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, கார்த்திகை தீபத்தன்று தங்களை லத்தி சார்ஜ் செய்வதாக அச்சுறுத்திய காவல்துறையைக் சீண்டும் செய்யும் விதமாக, “சி.ஆர்.பி.எஃப் இங்கே… போலீஸ் லத்தி எங்கே?” என்று உரத்த குரலில் கோஷங்களை எழுப்பியது அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.
தீபத் திருநாளில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசியல் அமைப்புகளின் இந்த நூதனப் போராட்டத்தால் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர்ந்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.


