மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு செயல்படுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து ‘அரசியல் டுடே’ வார இதழ் முன்பே கணித்து வெளியிட்டிருந்த செய்தி தற்போது நூற்றுக்கு நூறு உண்மையாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணை (ப) எண். 23-ன்படி (நாள்: 13.11.2026), திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு ஐந்து பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, திரு. சி. ராஜபாண்டியன் (த/பெ. சு. சின்னபாண்டியன்), திரு. க. அழகப்பன் (த/பெ. அ. கந்தசாமி), திரு. வ. சண்முகசுந்தரம் (த/பெ. அ. வள்ளிநாயகம்), திருமதி. ரெஜினா தேவி (த/பெ. கேசவன்) மற்றும் திருமதி. சித்ரா (க/பெ. மா. கணபதி) ஆகிய ஐந்து பேரும், திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் செல்வி மற்றும் கோயில் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் கடந்த 13-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், அறங்காவலர் குழுத் தலைவராக திரு. வ. சண்முகசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, திருக்கோயில்களின் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்படுபவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். நியமனத்திற்கு முன்பாக விண்ணப்பதாரர்களின் பின்னணி குறித்துத் துறை ரீதியான சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரசாணை வெளியிடப்படுவது வழக்கம். இருப்பினும், புதிய அறங்காவலர் குழு நியமன நடைமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் தகுதிகள் குறித்துப் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
குறிப்பாக, இந்த அறங்காவலர் குழு நியமனத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும், இது தொடர்பான முக்கியத் தகவல்களையும் இந்த வார ‘அரசியல் டுடே’ வார இதழ் விரிவாகவும், துல்லியமாகவும் கணித்து முக்கியச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு செயல்படுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அரசியல் டுடே’ வார இதழ் முன்பே கணித்து வெளியிட்டிருந்ததைப் போலவே, தற்போது உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்தது போன்ற இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தடை உத்தரவு, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாக வட்டாரத்திலும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


