• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டி

Byவிஷா

Mar 22, 2024

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 23 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
மேலும், புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
அதே நேரத்தில், பாஜக அணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நேற்று இரவு அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது.
அமமுகவுக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் பங்கீட்டை முடித்துள்ளோம். யாருக்கும் நெருக்கடி கொடுத்து பாஜக வளர விரும்பவில்லை. தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு எதிரான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துள்ளது.
பாஜக கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆதரவு கொடுப்பார்கள். நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்றார்.