• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளியில் ஆள்மாறாட்டம் : பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Byவிஷா

Nov 14, 2024

அரசுப் பள்ளியில் ஆள் மாறாட்டம் செய்த ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த பாலாஜி என்பவர் தனக்குப் பதிலாக வேறொரு நபரை கொண்டு பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இதுபோல 10 ஆயிரம் ஆள் மாறாட்ட ஆசிரியர்கள் பணிபுரிவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்க செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, ”ஆசிரியர் பாலாஜி பிடிபட்டதை தொடர்ந்து, மாணவர்களின் கல்வி நலன் கருதி, மாவட்ட கல்வி அலுவலரே பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டு நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், வேறு நபர்களை பாடம் நடத்த வைக்கும் ஆசிரியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து இறுதியாணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தொடக்கக்கல்வி தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் நியமனம் பெற்ற தற்காலிக ஆசிரியர்கள் தவிர்த்து வேறு நபர்கள் பணிபுரிகிறார்களா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை எதுவும் பெறப்படவில்லை. 10 ஆயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தி ஆகும்” எனக் கூறியுள்ளார்.