• Fri. Apr 19th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 11, 2022

நற்றிணைப் பாடல் 60:

மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

பாடியவர்: தூங்கலோரியார்
திணை: மருதம்

பொருள்:

உழவ! நாற்று நடும் வயலுக்குச் சென்றால் வயலில் பூத்துக்கிடக்கும் நெய்தல், சாய் ஆகியவற்றை அழிக்காமல் இருக்கச் செய்வாயாக. அவை தழையாடை புணைந்து அணிந்துகொள்ள இவளுக்கு உதவுமல்லவா. மலை முகடுகள் போல உயர்ந்து காணப்படும் நெல் சேமிப்புக் கூடுகள் பலவற்றைக் கொண்ட உழவனே! எருமையைக் கட்டி உழும் உழவனே! இரவு முழுவதும் நாற்று நடும் நினைவோடு உறங்காமல் இருந்துவிட்டு, விடியற்காலத்தில் வயிறார உண்டுவிட்டு வயலுக்குச் செல்கிறாய். பொங்கல் சோற்றில் வரால் மீன் குழம்பு ஊற்றித் தின்றுவிட்டுச் செல்கிறாய். விரல்களை விரித்துக் கை நிறைய அள்ளித் திணித்து அமுக்கி உண்டுவிட்டுச் செல்கிறாய். நடும்போது அங்கு வளர்ந்திருக்கும் நெய்தல், சாய் ஆகியவற்றை அழித்துவிடாதே. அவை இவளுக்குத் தழையாடை செய்துகொள்ள உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *