• Fri. Apr 26th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 12, 2022

நற்றிணைப் பாடல் 61:
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
”படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?” என்றிசின், யானே.

பாடியவர்: சிறுமோலிகனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

தோழி! இதைக் கேள். விரும்பும் ஆசை நாள்தோறும் துன்புறுத்தியது. அதனால் பெருமூச்சு விட்டேன். ஆண்மானைப் பிடிக்க ஏவப்பட்ட பெண்மான் (பார்வை-மான்) போல வருந்தினேன். தாய் என் துன்பத்தை அறிந்துகொண்டவள் போலப் பேசினாள். சின்னவளே! தூங்கமாட்டாயா – என்றாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. நெஞ்சுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். கான்கெழு நாடனை எண்ணி நெஞ்சத்தைப் பறக்கவிட்ட எனக்குக் கண்ணும் மூடுமா – என்று நெஞ்சுக்குள் சொல்லிக்கொண்டேன். பரல் கற்கள் பரந்து கிடக்கும் பள்ளத்தாக்கு அவன் நாடு. தளவம் என்னும் செம்முல்லைப் பூக்களை வாயில் வைத்துக்கொண்டு மரம் கொத்திக் குருவி பெருமழை பொழிந்த பாறைமீது திரியும் நாடு அவன் நாடு.

தளவம் பூ போன்ற தலைவியை உய்த்துக்கொண்டு தலைவி திரிவதை இறைச்சிப் பொருளாகச் சுட்டும் பாடல் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *