• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Feb 27, 2023

நற்றிணைப் பாடல் 123:

உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே

பாடியவர்: காஞ்சிப் புலவனார்
திணை: நெய்தல்

பொருள்:

பூவும் தழையும் பறித்துத் தழையாடை புனைந்து உடுத்திக்கொண்டு, மணல்வீடு கட்டி விளையாடும்போது, மணல் வீட்டில் ஓடும் நண்டுகளைப் பார்த்து மகிழ்வாயே. இப்போது ஏதோ நினைத்துக்கொண்டு கவலைப்படுகிறாயே. கவலை வேண்டாம். அவர் வந்துவிடுவார், என்று தோழி, தலைவன் வருகையைத் தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.  குருகுப் பறவைக் கூட்டம் பனைமரத்துக் கூட்டில் இருந்துகொண்டு நள்ளிருளில் ஒலி எழுப்பும் கானல் இது. உப்பங்கழியில் வயிறார இரை உண்ட குருகுகள் அவை. வரிசையாகப் பறந்து செல்லும் குருகுகள் அவை.     பனைமரத்து மடலில் அவை கூடு (குடம்பை) கட்டி வாழும்.
அந்தக் கானல் நிலத்தில் காலை வேளையில் பூக்களைப் பறித்து அணிந்துகொண்டு சிற்றில் இழைத்து, தோழிமாரோடு விளையாடுவாய். கடல் அலையில் ஓடி விளையாடுவாய். சேற்று (சேர்ப்பு) வளையிலிருந்து ஓடிவரும் நண்டைப் பார்த்துக்கொண்டிருப்பாய். இவையெல்லாம் உன் சிறுவிளையாடல்கள்.  இப்போதெல்லாம் அந்தச் சிறுவிளையாடல்கள் அழுங்கிவிட்டன (நின்றுவிட்டன). 
உனக்கு நோய். நினைவு நோய். குறு நோய். அது உனக்குத் துயரம் தருகிறது. அவர் வந்துவிடுவார். துயரம் தீர்ந்துவிடும்.  தேன்மணம் கமழும் காவிப் பூக்களைப் பறிப்பாய். காவிப் பூ (காவி நிறச் செவ்வாம்பல்) நீரில் பூக்கும். அதற்குப் பகையாய் நிலத்தில் இருக்கும் தழைகளைப் பறிப்பாய். இரண்டையும் இணைத்துத் தழையாடை புனைந்து உடுத்திக்கொள்வாய். மணல் கரை கட்டிச் சிற்றில் இழைப்பாய். நண்டு அதில் பரிந்து ஓடும். அது கண்டல் மரத்தடியில் சேற்று வளையில் இருக்கும் நண்டு (அலவன்). அதனைப் பார்த்துக்கொண்டிருப்பாய்.