நற்றிணைப்பாடல்: 375
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப வருவைஆயினோ நன்றே – பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
பாடியவர்: பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி திணை: நெய்தல்
பொருள்:
நீண்ட கிளையையுடைய புன்னையின் நறிய மகரந்தம் உதிரும்படி அக் கிளைகளின்மீது அலங்கரித்தாற்போன்று வைகிய நாரையின் கூட்டம் இரை வேண்டிப் பெயர்ந்து உலாவாநிற்கும்; பலவாகிய மலர்களையுடைய கடற் கரைச் சோலையையும் மிக்க உவர்நீரையுமுடைய நெய்தனிலத் தலைவனே! நீ பலகாலும் வந்து முயங்கியும் எம்பால் அன்புடையை அல்லை; அங்ஙனம் அன்புடையையா யிருப்பின் அவளுடைய அறிவின் வழியே ஒழுகுகின்ற என்பாலும் சொல்லுவதற்கு வெள்குகின்ற நல்ல நுதலையுடையாளாகிய அத்தலைவி உவக்கும் வண்ணம்; பெரிய கடலிடத்து இராப் பொழுதிலே தண்கதிர்த்திங்கள் தோன்றுதலானே அதுகண்ட நெய்தல்லிய அலைகள் மோதுவனபோல எழுந்து வாராநிற்கும் உயர்ந்த மணல் நிரம்பிய கொல்லைகளையுடைய; யாம் உறைகின்ற எம்மூரிடத்து நீ அவளை மணஞ்செய்து கொள்ளுமாறு வரல் வேண்டும்! அவ்வாறு வருவையாயின் அது மிக நல்லதொரு காரியமாகும்.