• Wed. May 1st, 2024

இலக்கியம்:

Byவிஷா

Apr 18, 2024

நற்றிணைப்பாடல் 361:

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே; என்றும்
அரும் படர் அகல நீக்கி,
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.

பாடியவர்: மதுரைப் பேராலவாயர் திணை : முல்லை

பொருள்:

சிறிய மலரையுடைய முல்லையினது பெரிதும் மணம் வீசுகின்ற மலரை; நெடிய புகழையுடைய இறைவன் தானுஞ் சூடினன் உடன் வந்த இளைஞரும் சூடினர்; விசும்பைக் கடந்தாலொத்த பொன்னால் ஆகிய கலனை அணிந்த கனைக்கின்ற குதிரைகள்; மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்; ஆதலின் அவள் துனிகூருமென்று நீயிர் கவல வேண்டா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *