• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 7, 2024
நற்றிணைப்பாடல் 356

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை – வாழி, என் உள்ளம்! – ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?

பாடியவர்:பரணர்                                                                       திணை:

பொருள்:

என் உள்ளமே! நீ வாழ்வாயாக! நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தெளிந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய; ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னப்பறவைகள்; பொன்பொருந்திய நெடிய கொடுமுடிகளையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற தேவருலகின்கண் வாழும்; தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய; சிறகு முளைத்து வளராத தம் இளம் பார்ப்புகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லுகின்றபொழுது; அவற்றின் வருந்துதலில்லாத வலிய சிறகு வருந்தினாற்போல; பலகாலும் என்பால் நின்றும் அவள்பால் ஏகுதலாலே நீ வருந்தாநின்றனை; அதனை யான் நன்கு அறிவேன் காண்! இங்ஙனம் வருந்தியதன் பயனாக இனி மற்றொரு பொழுதிலாயினும் கீழ்பாற்கண் விடியலிலே தோன்றுகின்ற வெள்ளிபோல; நங் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ? அதனையேனும் ஆராய்ந்து கூறுவாயாக!